நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது

வலையுலகம் முழுக்க இப்போது ரஞ்சித் & ராஜராஜன் சர்ச்சைதான் பிரதான பேசுபொருளாக உள்ளது. சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு பிறகு ஒரு வரலாற்றாசிரியர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ''ராஜராஜ சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.
இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
“எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.
தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்? பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்ட தகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கலாம்.
விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு” என அந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார் அவர்.
“இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், “சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்” என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் “ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாக வெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.
சரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை”
சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.” என்றும் அந்த நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரலாற்றாசிரியர் இப்படி கூறி இருந்தாலும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு பிறகு, ராஜராஜ சோழனை பற்றி நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வரலாற்றாசிரியர்கள் பலர் என்னடா இது ராஜராஜசோழனுக்கு வந்த சோதனை.. என புலம்பியும் வருகின்றனர்.
அரசியல் பரபரப்புக்கு ராஜராஜசோழனை வம்புக்கிழுத்தாச்சு.. இனி அடுத்தது அகத்திய முனிவர் முதல் ஆதாம், ஏவாள் வரை இழுக்காமல் இருந்தால் சரி..!


Previous Post Next Post