ஜம்மு-காஷ்மீர் மாநில உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது

ஜம்மு-காஷ்மீர் மாநில  உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது அமைதி சீர்குலையும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


டெல்லியில் இருந்து  திரும்பிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-    டெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதசமாக இருக்கும் நிலையில், நாங்கள் மாநில உரிமை கேட்டு வருகிறோம். ஆனால் மாநில அந்தஸ்தில் உள்ள காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் முயற்சி அம்மக்களுக்கு  எதிரானது. அதுமட்டுமின்றி 370 சட்டத்தால் காஷ்மீரில் வாழும் பண்டித்துகள் பழங்குடியினர், சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர். அதிகாரமிக்க மாநிலத்தில் அதிகாரத்தை குறைத்தால் எப்படி அம்மாநில நிர்வாகத்தை நடத்த முடியும்? மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது. அம்மாநிலத்தை தனியாக பிரிப்பதன் மூலம் தீவ்ரவாதம் குறையுமா என்று தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அமைதி சீர்குலையும். இதுபோன்று மற்ற மாநிலங்களையும் இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகளை மோடி அமித்ஷா ஆகியோர் எடுப்பார்கள்.  ஜம்மு காஷ்மீரில் தற்போது தேவையானது வேலை வாய்ப்பு, தொழிற்சாலை, விவசாய வளர்ச்சி ஆகியவை தான்.  அதுமட்டுமின்றி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். பெருமான்மை இருக்கும் ஒரே காரணத்தால் மத்திய அரசு அனைத்தையும் குழிதோண்டி புதைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


 


Previous Post Next Post