பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு


பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் மிகவும் பிரபலம். இந்தப் பஞ்சாமிர்தத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அத்துடன் கோயிலிக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை உண்டால் சில நோய்கள் தீரும் என்றும் கருதுகின்றனர். இந்தப் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதன்முறையாக தமிழ்நாட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமை பழனி கோயிலுக்கு கிடைத்துள்ளது. வாழைப்பழம், வெல்லம், நெய், தேன்,ஏளக்காய், பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாமிர்தத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் என்பது  இதன் தனிச்சிறப்பு. இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை அடுத்து பழனி வாழ் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.