வடமாநில மழையால் திருப்பூரில் 100 கோடி பனியன் தேக்கம்

வடமாநிலங்களில் பெய்து வரும் மழையால் திருப்பூரில் சுமார் 100 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளது.


 

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 48 சதவீத பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மட்டுமல்லாமல் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்திலும் திருப்பூர் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. திருப்பூரின் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் பெரும்பாலும் ஆந்திரா, மும்பை, குஜராத், டெல்லி போன்ற வடமாநிலங்களையே அதிக அளவில் சார்ந்துள்ளது. திருப்பூரில் தயாராகும் பெரும்பாலான பின்னலாடைகள் இந்த மாநிலங்களுக்கு தினமும் லாரிகள் மூலமாகவும், ரயில் மூலமாகவும் அனுப்பபட்டு வருகிறது. இந்நிலையில் வட மாநிலங்களான மும்பை, குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில் பல ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமார் 100 கோடி மதிப்பிலான ஆர்டர்களை அனுப்ப முடியாமல் தவித்து வருவதாகவும்  மழை தொடர்ந்து பெய்து  வருவதால் லாரிகள் மூலமாக சரக்குகள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதே போல மழை காரணமாக வடமாநிலங்களில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில வர்த்தகர்களும் சரக்குகளை தற்போது அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும்  வேதனை தெரிவித்துள்ளனர்.  வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் திருப்பூரில் சுமார் 100 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.