டீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை - போலீசார் விசாரணை

மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். காலை மாரிமுத்து கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 6 பேர் கும்பல் அங்கு வந்து டீ குடித்தனர். பின்னர் காசு கொடுக்காமல் திரும்பினர். அப்போது மாரிமுத்து டீ குடித்ததற்கு காசு தாருங்கள் என்று கேட்டார். தரமுடியாது என்று அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. ஆத்திரம் அடைந்த 6 பேர் கும்பல் மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டீ குடித்த பணத்தை கேட்ட கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.