கோவில்பட்டியில் நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை அருகே செல்லும் நீர்வரத்து ஓடை முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்து சுமார் 135 கடைகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் நெடுஞ்சாலையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது மட்டுமின்றி,ஓடையில் செல்ல வேண்டிய மழைநீரும், கழிவுநீரும் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதற்கிடையில் கடந்த 2010ம் ஆண்டு கோவில்பட்டி நகரில் நீர்வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதற்கிடையே நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்பு குழுவினர் கோவில்பட்டி நகரில் நீர் வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவகத்தினை முற்றுக்கையிட்டு, சங்கு ஊதி தங்களது கோரிக்ககைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர். மனுவினை பெற்றுக்கொண்ட அவர் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு சென்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய்,தலைகாணியுடன் குடியேறுதல், திரைப்பட இயக்குநர் கௌதமன் தலைமையில் மிகப்பெரிய அளிவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் வரை சாலை விரிவாக்க பணிகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post