விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி எம்.பி

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும். அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றமும் வரும் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட அய்யனாரூத்து, மானங்காத்தான், தெற்கு இலந்தைகுளம், வெள்ளாளங்கோட்டை, தெற்கு கோணார்கோட்டை, செட்டிக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், உங்களோடு நின்று உங்கள் குறைகளை தீர்ப்பதற்கு பணியாற்றுவேன். உள்ளாட்சித் தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் வந்துவிடும். அதுபோல், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும் வந்துவிடும். தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் வரும். தற்போது தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நி்றைவேற்றுவேன். விரைவில், திமுக ஆட்சிக்கு வந்த பின், உங்கள் கோரிக்கையை சுலபமாக முடிக்க முடியும் என்றார் அவர். தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மாநிலத்தின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மாநிலத்தின் மக்களிடம் கருத்துக்களைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. காஷ்மீரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என்ற திமுகவின் கருத்தை தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, அதனை சார்ந்துள்ள பல திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் எதிரானதுதான். மாணவர்கள் பயன்படக் கூடிய வகையில் திட்டங்களையும், எல்லா தரப்பு மாணவர்களுக்கும் கல்வி என்பது எட்டக்கூடிய சூழ்நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். சிபிஎஸ்இ கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போனால் அந்த கட்டணத்தை பலரும் கட்ட முடியாத நிலை தான் இருக்கும் என்றார் அவர். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், திமுக மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் கருப்பசாமி, கிழக்கு ஒன்றியச் செயலர் சின்னப்பாண்டி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.