மதுரை சமயநல்லூரில் தனியார் காப்பகத்தில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஊழியர் கைதுமதுரை மாவட்டம் சமயநல்லூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 25 மாணவிகள் தங்கி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த காப்பகத்தில் பணிபுரியும் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஆதிசிவன் (வயது 48) காப்பகத்தில் தங்கி உள்ள 4 மாணவிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த காப்பகத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட 4 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், காப்பக ஊழியர் ஆதிசிவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என அந்த காப்பகத்தில் போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் மாதர் சங்கத்தினர் நேரடி விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் சிறுமிகள் அனைவரையும் திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.