திருப்பூரில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நீர் நிலைகள் மேம்படுத்தும் பணிகள் துவக்கம்


திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் சாலை காவிலிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நீர் நிலைகள் மேம்படுத்தும் பணியினை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் 
முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் பேசுகையில் :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான சிறப்புத் திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில்
குடிமராமத்துப் பணிகள் 2019-20 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1829 பணிகள் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காவிலிபாளையத்தில், சோளிபாளையம் முதல் காவிலிபாளையம் வரை சுமார் 1.20 கி.மீ தொலைவிற்கும் மற்றும் காவிலிபாளையம் முதல் காவிலிபாளையம் புதூர் வரை சுமார் 1.50  கி.மீ தொலைவிற்கும் என சுமார் 2.70 கி.மீ தொலைவிற்கு புதர் மண்டி கிடக்கும் நீர்வழித்தடங்களை தன்னார்வ தொண்டு அமைப்புகளின் சார்பில் மேம்படுத்தும் பணி சிறப்பான முறையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள முன்வந்துள்ள அனைத்து தன்னார்வ
அமைப்புகளுக்கு ( திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர், ஸ்ரீபுரம், காவிலிபாளையம் ஊர்பொதுமக்கள்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறேன். மேலும், மாவட்டத்திலுள்ள குளம், குட்டைகளை சீரமைக்கும் பணிக்காக முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்காக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தனியாக ஒரு அலுவலகம் விரைவில் துவங்கப்பட்டு கோரிக்கை அளிப்பவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு நாட்களில் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றினைந்து மழைநீரினை முழுமையாக சேமித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் பி.வாசுகுமார், இளநிலை பொறியாளர் சுரேஷ், கூட்டுறவு சங்கத்தலைவர் கருணாகரன், முன்னாள் மண்டலத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அரசு அலுவர்கள் மற்றும் தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post