தூத்துக்குடி சி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அரசு  துவக்கப் பள்ளியில், ஆங்கில் வழி வகுப்புக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி, கிராம பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலுகா, நாகலாபுரம் அருகில் உள்ளது ரெட்டிபட்டி கிராமம். இங்குள்ள அரசுத் துவக்கப்பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி  பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பள்ளியில்,  இதுவரை தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள்  பணியாற்றி வந்தனர். தற்போது ஒருவர் பணி மாற்றலாகி சென்று விட்டதால், இந்த ஆண்டு முதல், ஓராசிரியர் பள்ளியாக இயங்கி வருகிறது. பள்ளி வகுப்புகளும் தொடங்கி இரண்டு மாதம்  கடந்து விட்ட நிலையில்,  இன்னும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க படவில்லை. இருக்கும் ஒரு ஆசிரியரே நிர்வாக வேலையையும், கவனிப்பதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை நியமிக்கச் சொல்லி, சி.இ.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக கூறிய சி.இ.ஓ., ஒரு ஆசிரியரை நியமிக்க ஆணையும் பிறப்பித்திருக்கிறார்; ரெட்டிப்பட்டி  பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு, பழைய பள்ளியிலிருந்து விடுவிப்பதற்கான ஆணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரெட்டிப்பட்டி  கிராமத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், நேற்று துாத்துக்குடி சி.இ.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சி.இ.ஓ., முகாமில் சென்ற நிலையில், அங்கேயே இருந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து,  கிராமத்தினர் கூறுகையில், எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையான கல்வி அளித்து வருகிறது. ஒட்டு மொத்த பள்ளிக்கும் தற்போது தலைமையாசிரியர்  மட்டுமே பாடம் நடத்தி வருவதால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எங்கள் ஊர் பள்ளி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியை விட்டு  நீக்கி ,தனியார் பள்ளியில் சேர்ந்து விட முடிவு செய்துள்ளோம் என்று கூறினர்.