திட்டக்குடி கல்லூரில் 108 பால்குட ஊர்வலம்

திட்டக்குடி அருகே உள்ள கல்லூர் மாரியம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. திட்டக்குடி  அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தில் விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி நடைபெற்று தினந்தோறும் மகாபாரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பக்தர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் பின்னர் 108 பால்குடத்தில்  இருந்த பாலினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் சதீஷ் பக்தர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.