சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல்!!

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வேல் வைக்கப்பட்டுள்ளதால், 'அதர்மம் ஒழிந்து நன்மை பெருகும்' என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது. இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கம் அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த பிப்.,6 முதல், காவிரி ஆற்று நீர், தீர்த்த கலசம் வைத்து பூஜிக்கப்பட்டது. தற்போது வேல் இடம் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த சந்திரபுஷ்பம், 50, என்ற பக்தரின் கனவில், வேல் வைக்க உத்தரவானது. அதை தொடர்ந்து, வெள்ளியில் செய்யப்பட்ட வேல், உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டது.  இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: கடவுள் முருகனிடம் உள்ள வேல் அதர்மம், தீமையை அழிக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில், வேல் இடம் பெற்றுள்ளதால், நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.  வேல் கொடுத்த பக்தர் சந்திரபுஷ்பம், கூறியதாவது: திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன். என் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'என் சன்னதியில் உள்ள பெட்டியில் வேல் கொண்டு போய் வை' எனக்கூறி மறைந்தார். இதுகுறித்து பலரிடம் விசாரித்து, சிவன்மலையில் பெட்டி இருப்பதை அறிந்து, வேல் கொண்டு வந்தேன். இதற்கு முன்னதாக, சிவன்மலை கோவிலுக்கு வந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.