ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றமனுநீதி நாள் முகாமில் 138 பயனாளிகளுக்கு ரூ.36.28 இலட்சம் மதிப்பிலானநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு, வேளாண்மைத்துறை மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.4,000/- மதிப்பில் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஒரு விவசாயிக்கு தென்னை நுண்ணூட்ட உரம், ஆதிதிவிராடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஒரு நபருக்கு ரூ.5,000/- மதிப்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டி மற்றும் 2 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய் துறை மூலம் 108 பயனாளிகளுக்கு ரூ.21.09 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் மூலம் 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.14.90 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் என மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.36.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் பொதுமக்களிமிருந்து பெறப்பட்ட 202 மனுக்களில் 128 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அரசு அலுவலர்கள் கிராமப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும் மாதம்தோறும் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அதனை பரிசீலனை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக சமூக நலத்துறை இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. வேளாண்மைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், 5 ஏக்கர் நிலமுள்ள பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரினை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.


ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கால்நடைத்துறை மூலம் விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள், புறக்கடை கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் துறை மூலம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு நீண்ட நாள் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் அலுவலர்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் கடந்த மாதம் முழுவதும் நமது மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 12 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் போஷான் அபியான் திட்டத்தின்கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், வளர்இளம்பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சத்தான உணவுப்பொருட்கள் வழங்குவது குறித்து இத்;திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாத காலம் கட்டாயமாக தாய்மார்கள் தாய்ப்பால் வழங்கிட வேண்டும். தாய்மார்களுக்கு, பிறந்த குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்கள் சத்தான உணவுப்பொருட்கள் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு பல்வேறு விதமான சத்து மாவு பொருட்கள் வழங்கப்படுகிறது.


சுகாதாரத்துறை மூலம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.18 ஆயிரம் 3 கட்டங்களாக வழங்கப்படுகிறது. பருவமழை காலங்களில் தொற்றாநோய், டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும். நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளிகளிலும் குடிநீர் தொட்டிகளை சுத்தமாக மூடி வைக்க வேண்டும். டெங்கு கொசு 5 மில்லி தண்ணீர் தேங்கியிருந்தால்கூட உற்பத்தியாகிவிடும். இந்த கொசு சுமார் 500 மீட்டர் வரை பறந்துசென்று நோய்களை பரப்பும். முதியோர்கள், குழந்தைகளை டயோரியா போன்ற நோய்கள் அதிக அளவு பாதிக்க வாய்ப்புள்ளதால் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் பொது கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.


கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இன்று நடைபெறும் இந்த முகாமில் 138 பயனாளிகளுக்கு ரூ.36.28 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்; ஒவ்வொரு துறை வாரியாக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொண்டு அத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்கள்.


முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார்.


இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கரநாராயணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், சாத்தான்குளம் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தூர்ராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி செயலாளர் திருமணிநாடார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.