நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் என்எல்சி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தொமுச ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், அண்ணா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், ஐஎன்டியூசி ஆகிய சங்கங்கள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வு காணலாம் என முடிவுசெய்து வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கும் முடிவை கைவிட்டனர்.


இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி சங்கமான ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வுரிமை சங்கம் விடுதலை சிருத்தைகள் கட்சி சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணி சிஐடியு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை திட்டமிட்டபடி மாலை பெரியார் சிலையிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாக புறப்பட்டு என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி வந்தனர் இவர்களை நேரு சிலை அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வேல்முருகன் உட்பட முன்னணி சங்க நிர்வாகிகள் ஐந்து பேரை மட்டும் தலைமை அலுவலகத்திற்கு தனி வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்பொழுது என்எல்சி தலைமை அலுவலக வாயில் முன்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்ப மறுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த தொழிலாளர்கள் மற்றும் கட்சியினர் போலீஸ் தடுப்பையும் மீறி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு வந்து அங்கு வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் தவாக தலைவர் வேல்முருகன் மாவட்ட கலெக்டர் மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் பேசியதன் பேரில் அதன்பின்பு உள்ளே அனுமதித்து நிர்வாகிகள் உள்ளே சென்று வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கினார்கள். பின்னர் இதுகுறித்து தவாக வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.


என்எல்சி நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இதனையடுத்து நேற்று நாங்கள் என்எல்சி சேர்மனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருந்தோம். ஆனால் என்எல்சி நிர்வாகம் உள்ளே அனுப்ப மறுத்து உடன் நான் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு என்எல்சி சேர்மன் எங்களை சந்திக்க வில்லை. எங்களை சந்தித்த முதன்மை பொது மேலாளர் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்எல்சி நிர்வாகம் உடன் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை மூலம் உடன் தீர்வு காணவேண்டும். இல்லையெனில் அனைத்து  அரசியல் கட்சி தலைமையுடன் கலந்து பேசி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் இவ்வாறு கூறினார்.


 

 

Previous Post Next Post