தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தியும் , 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுய நிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த இறுதியாண்டு மாணவர்களில் 11 பேரை கல்லூரி நிர்வாகம் அதிரடியாக 6 மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆவேசமடைந்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வளக்கல்லூரி சுயநிதி மீன்வள பாடப்பிரிவு தொடங்க எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது  குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :-



கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை மீன் வளத்துறை அமைச்சகம் கைவிடவேண்டும். ஏற்கனவே மீன்வளக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சுயநிதி கல்லூரி பாடப்பிரிவை தொடங்குவதன் மூலம் மெரிட் மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும். இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து வந்த மீன்வளக் கல்லூரி இளுதியாண்டு மாணவர்கள் 11 பேரை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நிர்வாகம் 6மாத காலம் இடைநீக்கம் செய்துள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.


Previous Post Next Post