ஸ்ரீவைகுண்டம் - கருங்குளம் தீவிபத்தில் 25 ஆயிரம் வாழைகள் கருகி நாசம்: அதிர்ச்சியடைந்த விவசாயி மாரடைப்பில் மரணம்


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கருங்குளம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் ஆறுமுகம் (45) இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. இதில் இவர் வாழை பயிரிட்டிருந்தார். நேற்று (08.09.2019) மதியம் 12 மணியளவில் தீடிரென்று இப்பகுதியில் உள்ள வாழைதோட்டத்தில் தீ பற்றி எரிந்தது . அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கும் வேகமாக பரவியது, இதனால் சுமார் 50 ஆயிரம் வாழைகள் கருகின. 100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து சாம்பலாயின. தீ பற்றி எரிவதை கேள்விப்பட்டு வாழை தோட்டத்திற்க்கு வந்த ஆறுமுகம் அவருக்கு சொந்தமான வாழை தோட்டம் தன் கண் முன்னேஎரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் தீயை அணைக்க போராடியுள்ளார். ஆனால் காற்று அதிகமாக அடித்த காரணத்தினால் பரவிய தீ வாழைகளை கருக்கியது. இதில் குலை தள்ளிய வாழை குலைகளும் கருகின. இதனால் ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை கருங்குளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஆறுமுகம் இறந்தார். இதற்கிடையில் தீயை அணைக்க ஸ்ரீவைகுண்டம் தீயணைப்படையினர் வந்தனர். தீ எரியும் இடம் மெயின் ரோட்டில் இருந்து வெகு தூரத்தில் இருந்த காரணத்தினால் வாகனத்தை அருகில் கொண்டு செல்ல இயலவில்லை. எனவே டீயூப் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தீயை போராடி அணைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், தட அறிவியல் துறை உதவி இயக்குனர் கலா லெட்சுமி, செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் முத்து லெட்சுமி உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு விரைந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.