11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு இறந்த நிலையில் பிறந்த சிசு புதைப்பு: பலாத்காரம் செய்த தி.மு.க பிரமுகர் போக்ஸோவில் கைது

11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு இறந்த நிலையில் பிறந்த சிசு புதைப்பு: பலாத்காரம் செய்த தி.மு.க பிரமுகர் போக்ஸோவில் கைது!

 


 

தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்கரம் செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு இறந்த நிலையில் 6 மாத சிசுவை பெற்றோர்கள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பலாத்காரம் செய்த தி.மு.க பிரமுகர்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத் தானேந்தலைச் சேர்ந்தவர் ராஜ். டி.வி மெக்கானிக்காக உள்ள இவர் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி மகேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டி.வி பார்ப்பதற்காக மாணவி அடிக்கடி ராஜின் வீட்டிற்குச் சென்று வருவாராம்.

 


 

இந்நிலையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு அந்த மாணவியை ராஜ், பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், மாணவி கர்ப்பம் அடைந்துள்ளாராம். தான் கர்ப்பம் அடைந்ததுகூடத் தெரியாமல் வழக்கம் போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு 6 மாத பெண் சிசு இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த சிசுவை மாணவியின் வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் பெற்றோர்களே புதைத்துள்ளனர். அதன்பிறகு மாணவிடம் விசாரித்த போதுதான், கர்பத்திற்கு அதே தெருவில் வசித்து வரும் டி.வி மெக்கானிக் ராஜ்தான் காரணம் என்பது தெரியவந்தது.

 

இதற்கிடையில், பள்ளி மாணவிக்கு இறந்த நிலையில் பிறந்த விவகாரமும், அந்த சிசு புதைகப்பட்ட விவகாரமும் காட்டுத்தீயாய்ப் பரவியது. புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸார் இதுகுறித்து விசாரணை செய்து டி.வி மெக்கானிக் ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், புதைக்கப்பட்ட சிசுவை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்திடவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.