கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு களம் இறங்கும் 92 வயதான மூதாட்டி கனகவல்லி 

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு களம் இறங்கும் 92 வயதான மூதாட்டி கனகவல்லி.சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி கிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயதான மூதாட்டி கனகவல்லி என்பவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அவரின் பெயர் கனகவல்லி இவர் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முருங்கப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.இதே கிராம ஊராட்சியில் இவருடைய கணவர் அழகேசபூபதி, மகன் பார்த்தசாரதி ஆகியோரும் தலா 20 ஆண்டுகள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளனர். ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கனகவல்லி கூறுகையில், தானும், தனது குடும்பத்தினரும், ஊராட்சிமன்ற தலைவராக இருந்தபோது, தங்களுடைய கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, மின்சார வசதி , குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்தோம். இதனால் எங்கள் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், தேர்தலுக்காக பொதுமக்கள் எங்களை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய விடுவதில்லை என பெருமையாக தெரிவித்தார்.பொதுமக்களே தங்களுடைய பணத்தை செலவு செய்து எங்களை தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர், மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உள்ளதாக கனகவல்லி நம்பிக்கையுடன் தெரிவித்தார். காசு கொடுத்தால்தான் ஓட்டு என்ற தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களே செலவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பது, பொதுமக்கள் அந்த மூதாட்டியின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப் படுத்துகிறது. தள்ளாத வயதிலும் மக்கள் பணியாற்ற உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் கனகவல்லியின் முயற்சியாயை  அணைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.