கடையம் காவல் நிலையம் எதிரே பெண்ணுக்கு கத்திக்குத்து போலீஸ்காரர் கைது

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்துக்கு எதிரே பெண்ணை கத்தியால் குத்திய போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கர பாண்டியன் என்பவரது மகன் தட்சிணா மூர்த்தி (வயது 38). இவர் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடையம் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம்
என்பவரது மகள் முப்பிடாதி சக்தி (வயது 30). கணவரை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முப்புடாதி சக்திக்கும் தட்சிணாமூர்த்திக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தி வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் தட்சிணாமூர்த்தி
முப்பிடாதி சக்தி இடையேயான தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.  இந்நிலையில் இரவு 7 மணி அளவில் கடையம் காவல் நிலையத்திற்கு தட்சணாமூர்த்தி வந்துள்ளார்.இதைப்பார்த்த முப்பிடாதி சக்தி காவல் நிலையத்திற்கு எதிரே  நின்று கொண்டிருந்த காவலர் தட்சிணாமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில்  காவலர் தட்சிணாமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முப்புடாதி சக்தியை குத்தியுள்ளார். இதில் முப்புடாதி சக்தியின் தலை மற்றும்
கழுத்தில் பலத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் முப்புடாதி சக்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவலர் தெட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடையம் காவல்நிலையம் எதிரிலேயே ஒரு காவலர் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் காட்டுத் தீயாகப் பரவியது. அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி
ஜாகிர் உசேன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காவலர் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையம் காவல்
நிலையத்திற்கு எதிரிலேயே அதுவும் ஒரு போலீஸ்காரர் இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.