சமத்துவ சுடுகாடு வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பழனி வட்டாட்சியர் உடன் சமரச பேச்சுவார்த்தை

பழனி அருகே ஆயக்குடி பகுதி மக்களுக்கு சமத்துவ சுடுகாடு வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பழனி வட்டாட்சியர் உடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.



பழனி அருகே புதுஆயக்குடி பேரூராட்சியில் பதினெட்டு வார்டுகள் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் எட்டு, ஒன்பதாவது வார்டு மக்களுக்கு சரியான சுடுகாடு வசதி இல்லாததால் சாலையோரங்களில் காலம் தொட்டே புதைத்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக சுடுகாட்டை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சமப்படுத்தி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தங்களுக்கு சமத்துவ சுடுகாடு வேண்டும் என்று பல்வேறு சமூகத்தினரை ஒன்றாக இனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜய லட்சுமி, பழனி சார் ஆட்சியர் உமா,வட்டாச்சியர் பழனிசாமி ஆகிய பலருக்கும் பல்வேறு மனுக்கள் மற்றும் போராட்டங்கள் செய்து வந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் சமூக நலத்துறையின் மூலம் சமத்துவ சுடுகாடு வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறினர். இதனையடுத்து சமத்துவ சுடுகாடு தருகிறோம் என்று கூறி பல மாதங்களாகியும் எவ்வித வேலையும் நடைபெற வில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்பிரிவான இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகளை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக புது ஆயக்குடி எட்டு, ஒன்பதாவது வார்டு மக்களுக்கு 15 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சுடுகாடு அமைத்துத் தருகின்றோம் என்று உறுதியளித்தனர்.  இதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடனடியாக எங்களுக்கு சுடுகாடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சமரச பேச்சுவார்த்தை ஏற்றுக் கொண்டு கூட்டத்தை கலைத்தனர்.