தாய் யானை தனது குட்டிக்கு ரோட்டோரம் நின்று பால் ஊட்டிய அதிசய காட்சி

சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட கரும்பு லாரிகள் செல்கிறது.


இப்படி கரும்பு ஏற்றி கொண்டு போகும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக கரும்புகள் ஏற்றி கொண்டு செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் அதிகமாக உள்ள கரும்புகளை அவிழ்த்து ரோட்டோரம் மற்றும் காட்டுக்குள் வீசி விட்டு சென்று விடுகிறார்கள். இந்த கரும்புகளை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அங்கு ஆஜர் ஆகி விடுகிறது. இதனால் பண்ணாரி சோதனை சாவடி அருகே இப்போது தினம் தினம் குட்டிகளுடன் யானைகள் வருகிறது.

அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் யானைகளை நேரில் பார்த்து குதூகலிக்கிறார்கள். இன்னும் சிலர் விபரீதம் தெரியாமல் யானை அருகே சென்று செல்பி எடுக்கிறார்கள். இது ஆபத்தான செயல் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுவாக யானைகள், குட்டி யானையுடன் நிற்பதையும் ரோட்டை கடந்து செல்வதையும் பார்க்கலாம். ஆனால் தனது குட்டிக்கு பாசத்துடன் பால் புகட்டுவதை எவராலும் எளிதில் பார்த்து விட முடியாது. ஆனால் நேற்று பண்ணாரி வன சோதனை சாவடி அருகே ஒரு தாய் யானை தனது குட்டிக்கு ரோட்டோரம் நின்று பால் ஊட்டியதை பலர் நேரில் பார்த்து வியந்தனர். பரவசம் அடைந்தனர். வன சோதனை சாவடி அருகே பணியில் இருந்த வன ஊழியர்கள் அந்த யானை அருகே யாரையும் செல்ல விடாமல் பார்த்து கொண்டனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து குட்டியுடன் தாய் யானை காட்டுக்குள் புகுந்தது.


Previous Post Next Post