நகராட்சி தினசரி சந்தையில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

நகராட்சி தினசரி சந்தையில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

 


 

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ளே வரும் வாகனங்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தைவிட குத்தகைதாரர் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்கெட் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராமிடம் அளித்த மனு விவரம்:   கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் குத்தகைதாரர் உள்ளே வரும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை வசூல் செய்கின்றனர். நகராட்சி நிர்ணயித்த கட்டண பட்டியலை தினசரி சந்தையின் வாசல் முன்பும் வைக்க வேண்டும். மேலும், தினசரி சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டும். மேலும், தினசரி சந்தைக்குள் டீ, காபி உள்ளிட்ட பொருள்களை விற்க வரும் சிறுவியாபாரிகளிடம் பணம் கேட்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

 

மார்க்கெட் வியாபாரிகளான பாஸ்கரன், புலித்தேவன் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம், அழகுராஜா உள்ளிட்ட பலர் நகராட்சி ஆணையர் ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜாராம், செய்தியாளர்களிடம் கூறியது:   நகராட்சி நிர்ணயித்த கட்டணங்கள் குறித்த பட்டியலை இன்னும் ஒருசில தினங்களில் நகராட்சி நுழைவுவாயிலில் வைக்கப்படும். மேலும், தினசரி சந்தை வளாகம் மற்றும் மார்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறையுடன் கலந்து பேசி, விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

Previous Post Next Post