சென்னை காமராஜர் சாலையில் காலை நேர போக்குவரத்திற்கு 3 நாட்களுக்கு தடை!!!

 குடியரசு தினவிழாவை முன்னிட்டு அடுத்த 3 நாட்களுக்கு சென்னை காமராஜர் சாலையில் காலை நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளதால், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதையொட்டி, காவ‌ல்படை அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதால், இதற்கான ஒத்திகை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளன. சாந்தோம் பேராலயம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை ஒத்திகை‌ நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.


அதன்படி, சென்னை அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள், கிரின்வேஸ் சாலை மற்றும் கச்சேரி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், அண்ணாசாலை, வாலாஜா சாலையிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் நோக்கி வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாரிமுனையிலிருந்து காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு முன்பாக ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக திருப்பி விடப்படுகிறது. அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து மாற்றம் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையும், குடியரசுத் தினத்தன்றும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


Previous Post Next Post