நான்கு வழிச்சாலையில் வாகனங்களை நிறுத்தி சண்டை : அதிவேகமாக வந்த சொகுசு பஸ் மோதி 4 பேர் பரிதாப பலி!!!

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பள்ளிக்கூட தாளாளர்  ஐசக்  தனது காரில் தூத்துக்குடிக்கு சென்று  விட்டு மீண்டும் அரக்கோணத்திற்கு இன்று (திங்கள் கிழமை) அதிகாலை திரும்பி வந்து கொண்டு இருந்தார்.


இந்த கார்  இறைஞ்சி  அருகே வந்தபோது,  அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்து  காரின் பின்பகுதியில் மோதியது.  இதையடுத்து ஐசக் ஐயா காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


விபத்துக்குள்ளான காரும்,  அரசுப் பேருந்தும் சென்னை- திருச்சி நான்கு வழிச்சாலையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி சாலையில் நின்றனர்.


இந்த நிலையில், அதிகாலை சுமார் 3  மணி அளவில்நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் சொகுசு பேருந்து அதி வேகமாக வந்து சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதி பின்னர் அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த  ஐசக் மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சற்குணம் ஆகிய 3 பேர் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 4  பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.


மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


அவர்கள், சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு   மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த விபத்து பற்றி உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.