சபரிமலை பிரச்சினையில் பின்வாங்கியதற்கு கைமேல் பலன்: ரூ.69 கோடி அதிகமாக அள்ளிய கேரள அரசு!!!

 சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரச்சினையில் கேரள அரசு பின்வாங்கியதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவிலில் ரூ.69 கோடி அதிக வருமானம் கேரள அரசுக்கு கிடைத்து உள்ளது.  நடப்பு மண்டல, மகரவிளக்கு காலங்களில் ஜன.14 வரை வருமானம் ரூ.234 கோடியை எட்டியது. கடந்த ஆண்டை விட ரூ.69 கோடி அதிகம் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.சன்னிதானத்தில் அவர் கூறியதாவது: நடப்பு மண்டல, மகரவிளக்கு காலங்கள் பிரச்னை இன்றி நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.அடுத்த மண்டல காலத்துக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்படும். மாஸ்டர்பிளான் குழு அங்கீகரித்துள்ள ரூ.58 கோடிக்கான பணிகள் உடனடியாக தொடங்கும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. பம்பை-சன்னிதானம் ரோப்வே திட்டத்துக்கு மத்திய வன அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதை எண்ணி முடிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் வாசு, உறுப்பினர்கள் ரவி, விஜயகுமார் உடனிருந்தனர்.


கடந்த ஆண்டு சபரி மலையில் பெண்களை அனுமதிக்கவும், மலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கேரள மார்க்சிஸ்ட் அரசு முடிவு செய்து அதை நடத்தியும் காட்டியது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு பலத்த அடி விழுந்தது. இதனால் இந்த ஆண்டு கேரள அரசு பெண்களை அனுமதிக்க மறுத்தது. இதற்கு கைமேல் பலனாக கேரள அரசுக்கு 69 கோடி ரூபாய் அதிக வருமானம் கிடைத்து உள்ளது.