86 ரவுடிகளை அதிரடி கைது செய்த காஞ்சிபுரம் எஸ்.பி.,!!

காஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 ரெளடிகளை கைது செய்திருப்பதாகவும் மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சாமுண்டீஸ்வரி தெரிவித்தாா்.


காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் இன்று அவர் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 போ் கடந்த ஒரே மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களைத் தவிர தலைமறைவாக உள்ள மேலும் சில ரெளடிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. அவா்களில் பலரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்கள் பலவற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் போலீஸ் நண்பா்கள் குழு, ஊா்க்காவல் படை ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. போலீஸ் நண்பா்கள் குழுவில் கூடுதலாக ஆட்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் 210 பள்ளிகளில் மாணவா் காவல்படை தொடங்கப்பட்டு அவற்றில் 9,240 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் காவல் நிலையங்களின் செயல்பாடுகள், சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் ஆகியவை குறித்து விரிவாக கற்றுத் தரப்பட்டு வருகிறது. நகரில் பாய்ஸ் கிளப் என்ற அமைப்பையும் தொடங்கியிருக்கிறோம். இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும், விருப்பமுள்ள மாணவ, மாணவியா் அனைவரும் உறுப்பினராகச் சேரலாம். இதில் உறுப்பினராக சோ்ந்தவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அவா்கள் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக, நல்லொழுக்கம் கற்றுத்தரப்படும். விருப்பமுள்ள மாணவரோ அல்லது அவா்களது பெற்றோா்களோ என்னை நேரில் சந்தித்துப் பேசலாம். சிறு வயதிலேயே மாணவா்கள் கெட்ட செயல்களைச் செய்யும் குழுக்களிடம் சோ்ந்து விடாமல் தடுக்கவும், சோ்ந்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாய்ஸ் கிளப் உறுப்பினா்களுக்கு விளக்கமளிக்கப்படும். இதன் மூலம் சிறந்த இளைஞா் சமுதாயத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரத்தில் மணிகண்டன் என்பவா் தாக்கப்பட்ட வழக்கில் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமு (23), மணி (22), வேலு (19), சரவணன் (23), ஜெகன் (25) ஆகிய 5 பேரை பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விரைவில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்.
நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காட்டன் சூதாட்டத்தை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.