இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளை அழைத்து குடியுரிமை சட்ட திருத்தத்தால் பாதிப்பு இல்லை என்பதை விளக்க வேண்டும் - சு.குணசேகரன் எம்.எல்.ஏ., பேச்சு

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளை அழைத்து குடியுரிமை சட்ட திருத்தத்தால் பாதிப்பு இல்லை என்பதை விளக்க வேண்டும் சட்டப் பேரவையில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ., பேச்சு




இந்திய அரசியல் வரலாற்றில் இரட்டை தலைமையாக வீற்றிருக்கிற முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர் அவர்களுக்கும், சபாநாயகர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘நல் ஆளுமைத்திறன்’ விருதினை தமிழகத்துக்கு கிடைக்க செய்த முதல்வர் அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா டுடே பத்திரிகையில், ஒட்டு மொத்த செயல்திறன் கொண்ட மாநிலம் தமிழகம் தான் என்கிற வரலாற்று சாதனையை உரித்தாக்கிய முதல்வருக்கு மேலும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


காவிரி வடிநிலப்பகுதிகளில் எந்த ஒரு கட்டுமானமும் நடைபெறக்கூடாது என்றும், பெண்ணையாற்று படுகையில் உள்ள மார்க்கண்டேய ஆற்றின்  குறுக்கே எந்த ஒரு தடுப்பணையும் கட்டக்கூடாது என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஆளுநர் உரையில் இடம்பெற செய்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளை அழைத்து, அவர்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில், தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எப்போதும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் எடுத்துக்கூறி எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய சகோதரர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார். மேலும் அவர், ‘திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் வைக்க வேண்டும், திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். திருப்பூர் மங்களம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், திருப்பூரில் மேலும் இரண்டு ரயில் பாலங்கள் அமைக்க வேண்டும்’ என்பது உள்பட பல கோரிக்கைகளை விடுத்து உள்ளார். 


Previous Post Next Post