பொங்கல் பரிசை வீட்டுல கொண்டு வந்து கொடுங்க.. தூத்துக்குடி வக்கீலின் 'பேராசை'!

பொங்கல் பரிசுப் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே விநியோகம் செய்து தர வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு, வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் ஜினோசன், மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, 2020 – நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருட்களை பெற பொதுமக்கள் நியாய விலை கடையை அணுகி நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும், கர்ப்பிணி தாய்மார்களும் முதியோர்களும் வெகுநேரமாக காத்திருந்து பெறுகின்றனர்.இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருட்களை பெற காத்திருப்பதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலை மற்றும் பணிகளுக்கும் செல்ல முடியாததால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் நீண்ட நேரமாக காத்திருந்தும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப்பொருட்கள தர இயலாது என கடை ஊழியர் கூறியதும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

எனவே, பொதுமக்களின் சிரமம் கருதி தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருட்களை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே பெறும்படி ஏற்பாடு செய்து தருமாறும், மேலும் பொங்கல் பரிசுப் பொருட்கள் எந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்ற விவரங்களை அட்டவணை மூலம் தயார் செய்து நியாய விலைக் கடை வெளிப்புறம் மக்கள் காணும் வகையில் அறிவிப்புப் பலகையில் தெரியப்படுத்துமாறும் தங்களை (ஆட்சியர்) கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார். மனு அளிக்கும் போது அவருடன் உதவி பேராசிரியர் ஜோசப் பின்லே, பொன்னுச்சாமி, சங்கர நாராயணன், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோல்டன், கிங்ப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.