சுயேட்சை கவுன்சிலர்களை கடத்த திட்டம் தி.மலையில் போலீஸ் குவிப்பு

தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பு சுயேட்சை கவுன்சிலர்களை கடத்த திட்டம் தி.மலையில் போலீஸ் குவிப்பு பதற்றம்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று பதவியேற்றனர். ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றிபெற சுயேட்சை கவுன்சிலர்களை கடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 33 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 340 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 858 ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் 6199 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட 7430 உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே போட்டியின்றி மற்றும் வாக்குப்பதிவு மூலம் வெற்றிபெற்ற அனைவருக்கும் வெற்றிச்சான்றுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு மாவட்டம் முழுவதும் 860 ஊராட்சி மன்ற அலுவலகங்கள், 18 ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் ஊராட்சி தலைவர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வார்டு வாரியாக பதவியேற்றனர். மேலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதேபோல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை காந்திநகரிலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. வெற்றிபெற்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் முதலில் பதவியேற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான பா.ஜெயசுதா பதவிபிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மூத்த உறுப்பினர் முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதேபோல் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வருகிற 11ந் தேதி ஒன்றியக்குழு தலைவர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுயேட்சை ஒன்றியக்குழு உறுப்பினர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இதனால் சுயேட்சை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றவுடன் அவர்களை கடத்திச் சென்று வருகிற 11ந் தேதி வரை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக சுயேட்சை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியாக உள்ள திமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்ற நபர்களை மட்டுமே அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Previous Post Next Post