போலீஸ் எஸ். ஐ., யை சுட்டவர்கள் - சந்தேகப்படும் நபர்கள் படம் வெளியீடு

சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.. சந்தேக நபர்கள் 2 பேரின் புகைப்படங்கள் வெளியீடு..!


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து   அவர்களை தேடும் பணியை கேரள மற்றும் தமிழக காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.


களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் இருக்கும் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று இரவு 9.45 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்குள்ள மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.


மசூதி ஒன்றில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, 2 பேர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக காவல்துறை அளித்த தகவலின்பேரில் விசாரணை நடத்திய கேரள காவல்துறை, 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


அதில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிட்ட கேரள காவல்துறை, அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், தீவிரவாத அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 2 பேரையும் தேடும் பணியை இருமாநில காவல்துறையினரும் முடுக்கி விட்டுள்ளனர். 


இதுகுறித்து குமரி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில் ``சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனுக்கு தனிப்பட்ட பகையாளிகள் யாரும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி மற்றும் திருவிதாங்கோடு பகுதிகளில் போலீஸார் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.


மேலும், பெங்களூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் என தமிழக காவல் துறை தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, தமிழக காவல்துறையை அச்சுறுத்தும் விதமாக தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட தௌஃபீக் மற்றும் சமீம் ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். விரிவான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" என்றனர்.


இச்சம்பவம் குறித்து திருவனந்தபுரத்திலுள்ள சங்குமுகத்தில் கேரள காவல்துறை டிஜிபி லோகநாத் பெஹராவுடன் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தினார். பின்னர் மார்த்தாண்டத்தில் உள்ள வில்சனின் வீட்டுக்கு சென்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


இதன்பின்னர் உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், மார்த்தாண்டத்திலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


இதனிடையே, வில்சனின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி, மார்த்தாண்டத்தில் அவரது வீட்டின் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர். 


இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வில்சனின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் வில்சனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவி அளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


Previous Post Next Post