இன்னும் எத்தனை நாளைக்கு சின்னப்பையன் கேரக்டர்..?? ரஜினி படத்துக்கு ' கிழி ' விமர்சனம்

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. காலை காட்சிகளிலேயே ரசிகர்கள் பட்டாளம் மேளதாளம் முழங்க கண்டு களித்தனர். தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடின.


 


இந்த நிலையில் தர்பார் படம் விமர்சனம் குறித்து பார்ப்போம்:


தர்பார் படத்துக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஹலோ தமிழ் சினிமா டாட் காம் விமர்சனமானது இது:


இந்த முறை ஏ.ஆர்.முருகதாஸ் மீது கதைத் திருட்டுப்பட்டம் கட்ட முடியாது… ஏன்னா... கதைன்னு ஒன்னு இருந்தாதானே..!!


தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக வில்லன்களை வெற்றி கொள்ளமுடியாமல் இருந்த நிலையில் இப்படத்தில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு அவர்களை தர்மசங்கடத்தில் முழிக்க வைத்திருக்கிறார். 


படத்தில் கதை என்ற ஒன்று இருந்தால்தானே? அல்லது ஏற்கனவே பார்த்த நூத்திச்சொச்ச போலீஸ் கதைகளின் கய்தையையே மீண்டும் எடுத்தால்? இதில் இரண்டாவது வகையறாவில் சேரும் இந்த தர்பார் படம்.


ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றில், ஒரு குற்றவாளியைப் பிடிக்க 20 போலீஸ் அடங்கிய குழு ஒன்று அவன் வீட்டுக்கே செல்கிறது. வீடு முழுவதும் தீ வைத்து எரித்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்கிறான் குற்றவாளி. அந்தத் தீயில் சிக்கி 17 போலீஸ்காரர்கள் உயிரிழந்துவிடுகிறார்கள். இதனால், காவல்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. போலீஸின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும், நம்பிக்கையின்மையையும் பயன்படுத்தி போதை மருந்து விற்பனையும், பாலியல் தொழிலும் மும்பை நகரத்தை சீரழிக்கிறது. இந்த குற்றங்களையெல்லாம் ஒடுக்கி, மக்களுக்கு மீண்டும் போலீஸ் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக புதிதாக நியமிக்கப்படும் கமிஷனராக ரஜினி வருகிறார். 70 வயதிலும் 20 வயது இளைஞராக ரஜினி தோற்றமளிக்கிறார் என்று குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று உத்தரவு. இல்லாவிட்டால் நமக்கும் என்கவுண்டர்தானாம்.
மீதி கதைக்கு வருவோம்


தன் மகளான நிவேதா தாமஸுடன் மும்பையில் இவர் இறங்குவதற்கு முன்பே துணை முதலமைச்சரின் மகளை சிலர் கடத்திவிடுகின்றனர். இந்த விசாரணையில் இறங்கும் ரஜினி, துணை முதல்வர் மகளுக்கு போதைப் பழக்கம் இருப்பதைக் கண்டுபிடித்து அதன்பின் அவரையும் கண்டுபிடிக்கிறார். ஆனால், இந்தத் தகவலை வெளியில் சொல்லாமல், துணை முதல்வரின் மகளைத் தேடுகிறோம் என்ற போர்வையில் மும்பை மற்றும் அதனைச் சுற்றிய நகரங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலிலிருந்து மீட்டெடுக்கின்றனர்.


இந்த சோதனையின்போது, மும்பையின் பிசினஸ் மேக்னட் ஒருவரின் மகனும் சிக்குகிறார். 13 வயது சிறுமிகளையும் விட்டுவைக்காத அந்தக் காமக் கொடூரனை சிறையில் அடைத்து தண்டனை வாங்கித்தருகிறார். சிறைக்குச் செல்லும் தொழிலதிபரின் மகனைக் காப்பாற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஏற்படும் பாதிப்புகளும் தான் தர்பார் திரைப்படத்தின் மீதிக்கதை.


ரஜினி நடிப்பில் குறை வைக்கவில்லையென்றாலும் இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இன்னும் சின்னப்பையன் தான் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளப்போகிறாரோ என்று புரியவில்லை. அதிலும் ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக இருந்துகொண்டு தன் மகள் வயது நயன் தாராவுக்கு நூல் விடுவதெல்லாம் சென்சாரில் கத்தரி போட்டிருக்கவேண்டிய சமாச்சாரங்கள். ஆனால் எனக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கிறது என்று காட்டுவதற்காகவே ஸ்ரீமனை வைத்து ரஜினியிடம்,’உங்க மக இந்த மாதிரி வயசான ஒருத்தர லவ் பண்ணிட்டு உங்க முன்னால வந்து நின்னா உங்க மனசு என்ன பாடுபடும்’என்று ஒரு காட்சி வைத்திருப்பது மகிழ்ச்சி.


நயன் சும்மா நாலைந்து காட்சிகளுக்கு தண்டத்துக்குவந்து போகிறார். ரஜினியின் மகளாக நடி`த்திருக்கும் நிவேதா தாமஸ்தான் படத்தின் உண்மையான நாயகி.அப்பாவின் மேல் காட்டும் பரிவில் நெகிழ வைக்கிறார்.யோகிபாபு ஒரு சில இடங்களில் ரஜினியை ஓட்டிய வகையில் ஓ.கே.மற்றபடி அவை காமெடிக்காட்சிகள் என்று நம்பிய இயக்குநர் வட்டாரத்தின் டிராஜடியை என்னவென்று சொல்வது?


படத்தில். பல வில்லன்கள் இருந்தாலும் உண்மையான வில்லன் இரைச்சலமைப்பாளர் அனிருத்தான். வாத்தியக்கருவிகளை இதற்குமேல் காதுகிழியக் கிழிக்க முடியாது.’நீங்க மட்டும் காதுல பஞ்சு வச்சுக்குவீங்களா பாஸ்?


இது அரசியல் படம் அல்ல’என்று பேட்டிகள் கொடுத்திருக்கும் முருகதாஸ் படத்தில் இரு முறை சிறைப்பறவை சசிகலாவை வம்பிழுத்திருக்கிறார். விதவிதமான துப்பாக்கிகளால் மோதிக்கொள்ளும் ரஜினி அண்ட் வில்லன் பார்ட்டிகள் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் ஒத்தைக்கு ஒத்தை வெறும் கையால் மோதிக்கொள்வது வெறி ஏற்றுக்கிறது. ரஜினி வெறியர்கள் ஒரு முறை பார்க்கலாம். மற்றவர்கள் டிக்கட்டோடு காதில் ஒரு முழம் பூ சுற்றிக்கொண்டு போவது நல்லது.


நன்றி
hellotamilcinema.com