மசூதியில் முழங்கிய மங்கல வாத்தியம்: இந்து பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்த இஸ்லாமியர்கள்!!!

கேரளத்தின் காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்த்த அஞ்சு என்ற ஏழைப்பெண்ணின் திருமணம் நடைபெற்றது.


சேராவள்ளி யை சேர்ந்த அசோகன் - சிந்து தம்பதியர் மகள் அஞ்சு..
தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு தனது மகள் அஞ்சுவை வளர்த்து படிக்க வைத்த சிந்து, போதிய  வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் திணறினார்.


மகளுக்கு திருணம் செய்ய உதவி கேட்டு சேராவள்ளி ஜமாஅத் நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்தார்.  அந்த கடிதத்தை பரிசீலனை செய்த ஜமாஅத் நிர்வாகிகள் சிந்துவின் குடும்ப வறுமையை கவனத்தில் கொண்டு அஞ்சுவின் திருமணத்துக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.


சிந்துவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சரத் என்பவருடன், திருமணத்திற்கு சேராவள்ளி ஜமாஅத் செயலாளர் நுஜுமுதீன் பெயரிலேயே அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு ஜும்ஆ மசூதி வளாகத்தில் திருமணத்தை நடத்தினர். 


ஜமாஅத் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை பகிர்ந்து கொள்ள ஊர் மக்கள் சுமார் மூவாயிரம் பேருக்கு சிறப்பான அறுசுவை சைவ உணவும் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்த திருமணம் கேரளம் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க பாராட்டுக்களை வென்று உள்ளது.