தொடரும் நகை பறிப்பு, பாலியல் அச்சுறுத்தல்: தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்க கோரிக்கை


திருப்பூர், ஜன. 22 –


பத்மாவதிபுரத்தில் தொடரும் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பெண்கள், பாதசாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.


புதன்கிழமை மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலியுடன் பத்மாவதிபுரம் கிளை துணைத் தலைவர்கள் சாந்தி, கலாமணி, செயலாளர் லலிதா, துணைச் செயலாளர் ரேவதி உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு அளித்தனர்.


இம்மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 10ஆவது வார்டுக்குள் காந்திநகர், பத்மாவதிபுரம் மற்றும் ஜீவா காலனி உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான வீடுகள், பனியன் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் பெண்களிடம் நகைப்பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பெண்கள் கடைகள், கோயில்களுக்கு வெளியே செல்ல முடியாமல் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஜீவா காலனி பகுதியில் இரு பெண்களிடம் தனித்தனியே நகைப் பறிப்பு முயற்சிகள் நடைபெற்றது. இது போன்ற தொடர் சம்பவங்களால் பெண்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஜீவாகாலனி பகுதியில் சாலையில் தனியாக நடந்து வரும், காலை நேரங்களில் கோலம் போடும் பெண்களிடம் வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயலும் சம்பவங்களும் நடக்கிறது. இதுபோன்ற சமூக விரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், நகைகளை பறிகொடுத்த பெண்களுக்கு நகைகளைக் கண்டுபிடித்துத் தரும்படியும் மாதர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Previous Post Next Post