மயிலாடுதுறையில் சைவத் திருமடங்கள் சட்ட பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்!!!

மயிலாடுதுறையில் சைவத் திருமடங்கள் சட்ட பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்


 மயிலாடுதுறையில் தை முதல் நாளன்று சைவத் திருமடங்கள் சட்ட பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் 18 சைவ மடங்கள் உள்ளன. சைவ மடங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டு சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாக பாவித்து வளர்த்து வருகின்றன.
 பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல மன்னர்களும், ஜமீன்தார்களும். சிவனடியார்களும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மடங்களுக்கு அளித்து சைவத்தையும் தமிழையும் வளர்க்க உதவினார்கள். தற்போது 18 சைவ மடங்களில் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, வேளாக்குறிச்சி ஆகியவை முதன்மையான சைவம் மடங்களாக திகழ்கின்றன. சைவ மடங்கள் அனைத்திற்கும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நஞ்சை ,புஞ்சை நிலங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் பகுதிக்கு கொடுத்து அந்த வருவாயில் மடங்களும் மடங்களை சார்ந்த கோயில்களிலும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
 தற்போது தொடர்ந்து சைவ மடங்களுக்கு தெரியாமல் ,பகுதிக்கு வைத்திருக்கக்கூடியவர்கள்  மடங்களின்  அனுமதி இல்லாமல் பெரும் பணத்திற்கு சொத்தை மாற்றம் செய்வதும் அனுபவத்தை மடத்தின் அனுமதி இல்லாமல் வேறு தரப்புக்கு விட்டுக் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமல்லாமல் சைவ மடாதிபதிகளை தேவையில்லாமல் நிந்திப்பதும் விமர்சனம் செய்து வருவதையும் சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். சைவத்தில் குருமகாசன்னிதானம் சிவத்துக்கு ஒப்பாக கருதப்படுகிறார்கள். நடமாடும் சிவனாக குருமகாசந்நிதானம் அவர்களை சைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நடமாடும் சிவனாக உள்ள குருவை நிந்திப்பது  சிவனையே நிந்திப்பது ஆகும்.  புராணங்களில் குருவை நிந்திப்பது மாபெரும் பாவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சைவ மடங்களின் மடாதிபதிகள் ,சைவ மடங்களின் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக மயிலாடுதுறையில் சைவத் திருமடங்கள் சட்ட பாதுகாப்பு இயக்கம் தைத்திங்கள் முதல்நாள் தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில் அங்கத்தினர்களாக உள்ளார்கள். சைவ மடங்களை பாதுகாக்கவும் சைவ சொத்துக்களை பாதுகாக்கவும் குருமகாசன்னிதானம் நற்பெயருக்கு உறுதுணையாகவும் இருப்பதற்கு மேற்படி வழக்கறிஞர்கள் சட்ட போராட்டம் நடத்த தயாராக உள்ளார்கள். சைவத்தையும் தமிழையும், சைவத்தையும் பாதுகாப்பதே சைவ மடங்களின் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் தலையாய கடமை என தெரிவித்துள்ளார்.