தங்கையை திருமணம் செய்து வைக்க கேட்டதால் நண்பனை கொன்ற இளைஞர் கைது!!!

ஈரோடு மாவட்டம் வெட்டுகட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). விசைத்தறி கூடத்தில் வேலை செய்த விக்னேஷ், தன் தங்கையுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.  விக்னேஷுக்கு தன்னுடன் வேலை பார்த்த கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.


நண்பன் என்ற முறையில் ஈரோடு விக்னேஷ் வீட்டுக்கு, கொளத்தூர் விக்னேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் ஈரோடு விக்னேஷின் தங்கை மீது கொளத்தூர் விக்னேஷுக்கு ஒருதலையாக காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தன் நண்பனிடம் கொளத்தூர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரோடு விக்னேஷ், அவரை கண்டித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கொளத்தூர் விக்னேஷ் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஈரோடு விக்னேஷை கைது செய்தனர்.  தன் தங்கையை திருமணம் செய்துவைக்கக் கோரி வற்புறுத்தியதால் நண்பனை கொன்றதாக ஈரோடு விக்னேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஈரோடு விக்னேஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.