திருப்பூர் மாநகர காவல் துறைக்கு சிஐடியு கண்டனம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் கருத்து சுதந்திரம், கூட்டம் கூடுவது உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு காவல் துறை தடை விதிப்பதை ஏற்க முடியாது, காவல் துறையினர் அத்துமீறி தலையிட்டு உரிமைகளை மறுக்கும் செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்கு உரியது என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டக்குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தமிழ்நாடு மாநகர காவல் துறை சட்டம் பிரிவு 41, 41 ஏ ஆகியவற்றின் கீழ் திருப்பூர் மாநகர காவல் துறை 15 நாட்களுக்கு ஒரு முறை பொது உத்தரவைப் பிறப்பித்து வருகிறது. இதில் ஊர்வலம், பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகளின் இயக்கங்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களிடம் துண்டறிக்கை விநியோகம் செய்வது, சுவரொட்டி ஒட்டுவது, சுவர் விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்கும் கெடுபிடி செய்யும் விதத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இதுவரை இல்லாதபடி துண்டறிக்கை விநியோகம் செய்யவும், சுவரொட்டி ஒட்டவும் கூட காவல் துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என கூறியிருப்பது அப்பட்டமான கருத்துரிமை பறிப்பு நடவடிக்கை ஆகும். அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது நல அமைப்புகள், இயக்கங்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் ஜனநாயக நடைமுறையில் காவல் துறை தலையீடு செய்யவும், ஒழுங்குபடுத்துவது என்ற பெயரால் கெடுபிடி செய்து தடை விதிக்கவும் முயல்வது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதிப்படுத்தி இருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவது, கூட்டும் கூடுவது ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானதாக மாநகர காவல் துறையின் உத்தரவு அமைந்துள்ளது. எனவே ஜனநாயக விரோதமான இந்த உத்தரவை ஏற்க முடியாது.
அத்துடன், கடந்த ஜனவரி 19ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி எதிரில் சிஐடியு அகில இந்திய மாநாட்டுக்கான தியாகிகள் ஜோதி பயணக்குழுவுக்கு வரவேற்புக் கொடுக்கும் நிகழ்ச்சி, காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியிலும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, இங்கு பேசக் கூடாது, பாடக் கூடாது என்று இடையூறு செய்தார். அனுமதி பெற்று நடத்திய நிகழ்ச்சியிலேயே காவல் துறையினரின் இந்த அடாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒருபுறம் 15 நாட்களுக்கு ஒரு முறை காவல் துறை சட்டம் என்ற பெயரால் ஜனநாயக உரிமைகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிப்பது, மறுபுறம் அனுமதி பெற்று நடத்தும் நிகழ்ச்சிகளில் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்வது என்று திருப்பூர் மாநகர காவல் துறையினரின் செயல்பாடு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கக்கூடியதாகவும், கேலிக் கூத்து ஆக்குவதாகவும் உள்ளது.
பொது அமைதி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரால் இது போன்று அதிகார துஷ்பிரயோகம் செய்வதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது. எனவே திருப்பூர் மாநகர காவல் துறை இந்த உத்தரவைக் கைவிட வேண்டும். இது போன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவிப்பதுடன், அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக் கொள்வதாக கே.உண்ணிகிருஷ்ணன் கூறியுள்ளார்.