முனியப்ப சாமிக்கு 260 கிடாய் வெட்டி வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் உள்ளது.


இந்த கோவிலில் உள்ள முனியப்பசாமி, கையில் 25 அடி நீளகத்தியை ஏந்தியவாறு பிரம்மாண்டமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில்  ஆண்டு தோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா  நடைபெறும்.


அதே போல் இந்த ஆண்டு 30-ம் ஆண்டாக திருப்பதி முனியப்பசாமி திருவிழா ஞாயிறன்று தொடங்கியது. திருப்பதி முனியசாமி கோவில் விவசாய தோட்டங்களின் மையப்பகுதியில் உள்ளது.


இந்தக் கோவிலில் சாமி வேண்டி கிடாய் வெட்டினால் விவசாயம் செழிக்கும் என்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.


எனவே ஆண்டு தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.


பக்தர்களின் வேண்டுதல் நிறை வேறிய பிறகு ஆடுகள், சேவல்களை கோவிலில் வழங்கி தங்களது வேண்டுதல்களை நிறை வேற்றுவர். அப்படி இந்த ஆண்டு,கோவிலுக்கு  காணிக்கையாக வழங்கப்பட்ட 260 ஆட்டு கிடாக்களை கோவில் விழக்குழுவினரிடம் பக்தர்கள் வழங்கினர்.


 அவற்றை திருப்பதி முனியப்பசாமிக்கு பலியிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் 2500 கிலோ ஆட்டு இறைச்சியை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.


மேலும் திங்கள் கிழமை 200க்கும் மேற்பட்ட சேவல்களை வெட்டி பலியிடப்பட்ட படையல் பூஜை நடைபெற உள்ளது.