திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையட்டி இளைஞரணி சார்பில் 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் துவக்கிவைத்தார். திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரசு கலைக்கல்லூரி அருணை பொறியியல் கல்லூரி அத்தியந்தல் கிரிக்கெட் மைதானம் உள்பட 8 இடங்களில் போட்டிகள் நடைபெற்றன. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றிபெறும் அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறும். மாவட்ட துணை செயலாளர் மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் பா.கார்த்திக்வேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜாங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோரது படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.