திருமணத்திற்கு சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி வியாபாரி பலி

திருவண்ணாமலை ஐயங்குளத்தெருவைச்சேர்ந்தவர் விஜய்பாலாஜி (35) இவர் திருவண்ணாமலையில் தேங்காய் மண்டி வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு தனது ஊருக்கு காரில் மனைவி சத்தியாவுடன் (32) வந்து கொண்டிருந்தார். காரை விஜய்பாலாஜியே ஓட்டிவந்தார். திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் காமராஜர் நகர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் விஜய்பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி சத்தியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெறையூர் காவல்துறையில் சத்தியா கொடுத்தபுகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.