ஈரோடு மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிப்பு.. கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.03.2020) நேதாஜி காய்கறி சந்தை மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.தென்னரசு அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26.03.2020) கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக காணொலி காட்சி மூலம் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, நேதாஜி காய்கறி சந்தையில் அதிக சில்லறை வியாபாரிகள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு காய்கறி சந்தையை பிரித்து விற்பனை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நேதாஜி காய்கறி சந்தை இன்று (26.03.2020) முதல் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், பழங்கள் விற்கப்படும் சந்தை ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலன் கருதி தக்காளி மற்றும் வெங்காயம் ஆகிய இரு பொருட்களும் நாளை 27.3.2020 மற்றும் 28.3.2020 ஆகிய இரு நாட்கள், நேதாஜி காய்கறி சந்தையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக காய்கறிகளை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும். காமராஜர் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி காய்கறி விற்கப்படும் கடைகளுக்கு இடையே தேவையான அளவு இடைவெளி நுகர்வோர்களுக்கு தேவையான அளவு இடைவெளி தெரியும் வகையில் மாநகராட்சி அலுவலர்களுக்கு அடையாளப்படுத்துதல் (MARKING) மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும், சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பிற பகுதிகள் ஆகிய இடங்களைத் தொடர்ந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள் துறை வாகனத்தின் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தன்சுத்தத்தை பேணி பாதுகாத்து தமிழ்நாடு அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் மளிகை கடை இறைச்சிக்கடை, வங்கி, மற்றும் காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் மரு.மா.இளங்கோவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.விஜயகுமார், உட்பட நேதாஜி காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள், பழவியாபாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.