திருப்பூரில் இன்று ஒரு வயது குழந்தைக்கு கொரோனா: 10 வயதுக்குட்ப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 30 ஏரியாக்கள் கண்டெயின்மெண்ட் ஜோன் என்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 


கொரோனா தொற்று ஏற்ப்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான அளவு தற்காலிக மருத்துவமனைகள் பள்ளி, கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி விட்ட நிலையில், இன்னும் 60 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.


இன்று (மார்ச்.12.2020) மட்டும் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாநகரில் 11 பேர், அவிநாசி அருகில் உள்ள தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர்கள் 15 பேர், மங்கலத்தை சேர்ந்தவர்கள் 2 பேர். தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் 7 பேர்.


இன்று கொரோனா தொற்று அறிவிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிறுவர் சிறுமியர் ஆவர். அதில் ஒரு வயது ஆண்குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


மேலும்,  3 வயது பெண் குழந்தைகள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வயது சிறுவன் ஒருவனும், 5 வயது சிறுமி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 8 வயதில் ஒரு சிறுவன் மற்றும்  ஒரு சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 10வயதில் ஒரு சிறுவன், 12 வயதில் ஒரு சிறுவன் மற்றும் 14 வயதில் ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 15 சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கொரோனா தொற்று உடைய நபர்களின் குடும்பத்தினரே ஆவர்.


எனவே திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பதும், வீட்டிலேயே இருப்பது மட்டுமே கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு வழிவகுக்கும்.