கொரோனாவையே கொன்னு கிடத்திட்டாங்க... நோய் மீண்டவர்களை வழி அனுப்பிய கலெக்டர், போலீஸ் எஸ்.பி!

ஊரையே மிரட்டிய கொரோனாவிலிருந்து 13 பேர் மீண்டனர். அவர்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உற்சாகமாக வழி அனுப்பியது ஈரோடு மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. 


வீடியோ இணைப்பு கீழே:  


இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.   தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக உயர்ந்தது. இதில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்தனர். இன்று 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்துக்காரர்கள் 6 பேர்.


கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் வேதனை அடைந்து வந்த ஈரோடு மாவட்ட மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. 


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.


குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் மலர் கொத்துகளும், பழங்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்கவும், வெளி நபர்களை சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்ட மக்கள் கோரோனாவின் பரவல் ஈரோட்டில் அதிகம் என கவலைப்பட்டு வந்த நிலையில், கொரோனாவை கொன்றொழித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிய மனோதிடம் மிக்க 13பேருக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்கள், காவல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். 


விரைவில் மற்ற நோயாளிகளும் குணமடைவார்கள் இதனால் நோய்த்தொற்று கட்டுப்படும் என ஈரோடு மாவட்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.