போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி: 3 பெண் குழந்தைகள் நிலை பரிதாபம்

சூலூர் தாலுகா அலுவலக வீதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் பெர்னாண்டஸ் (வயது 35). இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது   சூலூரில்  வசித்து கொண்டு சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.



இந்த நிலையில் இந்த கம்பெனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி (சானிடைசர்) வழங்கப்பட்டது.



இதை பெர்னாண்டஸ் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்துள்ளார். நேற்றும் (10.மார்ச்.2020) போதைக்காக சானிடைசரை குடித்து விட்டு தூங்கி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை 02.00 மணிக்கு வீட்டில் அவர்  வாந்தி எடுத்துள்ளார்.


இதனால் அதிச்சி அடைந்த அவரது மனைவி, பெர்னாண்டசை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கொண்டு சென்ற போது வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது மனைவி சூலூர் காவல் நிலையத்தில்புகார் அளித்தார்.  சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்


இறந்து போன பெர்னாண்டசுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களது நிலை பரிதாபத்துகுரியதாக மாறி உள்ளது. 


Previous Post Next Post