திருப்பூர் மாவட்ட கொரோனா நிலவரம்: தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போலீசார் கண்காணிக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 108 பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.


மருத்துவமனை தனிமைப்படுத்தல்களும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 39பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 42பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 845 பேர் இதுவரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 


புதிய தொற்று இல்லாத நிலையில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ள அனைவரும் சீரான உடல்நிலையில் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் பாபுஜி மெயின் ரோட்டில் தனிமைப்படுத்த அமைக்கப்பட்ட தகர தடுப்பை பிரித்தெடுத்து விட்டு சிலர் நடமாடினர்.இதுகுறித்த செய்தி வெளியானதை அடுத்தி இன்று காலை மாநகராட்சி அலுவலர்கள் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.


ஆனால் அவற்றை மறுபடியும் பிரித்து விட்டு, வாகன நடமாட்டம் தொடங்கி உள்ளது. எனவே இப்பகுதியில் போலீசாரை காவலுக்கு நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.