கொரோனாவோட ஸ்மெல் கூட வெளில வரக்கூடாது: அக்கு அக்காக பிரிச்சு.. எல்லைகள அடைச்சு.. வைரசையே வாழ விடாமல் துரத்திய ஈரோடு மாவட்டம்;

கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்து அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் ஈரோடு மாவட்டத்துக்காரர்கள். வேகமாக இங்கு கொரோனா பரவியது; அதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை என அனைத்தும், ஈரோடு மாவட்டத்தை ஒரு வித அச்சத்துடன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது.


ஆனால் இன்று, அத்தணை பிரச்சினைகளையும் தூசி போல தட்டி தூக்கி எரிந்து விட்டு மீண்டு வருகிறது ஈரோடு மாவட்டம். நோய் துவக்கத்தில், வெளிநாட்டவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பேரை அலேக்காக தூக்கி இந்தியாவுக்கே துப்புக் கொடுத்தது இந்த மாவட்ட காவல் துறை தான்.


அதிலும் ஒரு வெளிநாட்டவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சையின் போது மரணமடைந்ததும், சுதாரித்தது இந்த மாவட்டத்தின் அரசு இயந்திரம். 

அந்த மாவட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் எஸ்.பி. சக்திகணேசன், மருத்துவத்துறை, சுகாதாரப்பணியாளர்கள், போலீசார் என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து செய்த முயற்சியால் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகம் அப்படியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.


முதலில் இங்கு கொரோனா பரவிய வேகத்தை கட்டுப்படுத்த வேண்டி  ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் உள்பட 10 இடங்களில் 33 ஆயிரத்து 330 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.


ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது சாதாரண வேலையா என்ன?  அதை கண்ணும் கருத்துமாக செய்து, அறிகுறி ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, பரவலை கட்டுப்படுத்தி நோய் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்திய இந்த மாவட்டத்தின் வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து துறையினருக்கும் இந்த மாவட்ட மக்கள் நிச்சயம் கடமைப்பட்டவர்கள் தான்.

இன்னும் கூட 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள்: 300 பேர் வீட்டுத்தனிமைப்படுத்தல் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனாவின் ‘ஸ்மெல்” கூட வெளியே போய் விடக்கூடாது என வரிந்து கட்டி செயல்பட்டு கொண்டு இருக்கிறது இந்த மாவட்ட நிர்வாகம். இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம், கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என எந்த நேரமும் மக்களை பரபரப்பு தொற்றிக் கொண்டே இருந்தது.


அங்கங்கே வீடுகள் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்பட்டன. ‘அக்கு அக்காக” வீதிகள் பிரித்து அடைக்கப்பட்டன. சந்தைகளில் சமூக இடைவெளி முழுமையாக கண்காணிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டன. மாநகர, நகர, கிராம சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டன.


வீடியோ:

வீடு வீடாக, வீதி வீதியாக கிருமி நீக்கம் செய்ய மருந்தடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அத்தணை திறனையும் பயன்படுத்தி, இன்னும் பல வடிவங்களில் ’கொரோனா” அரக்கன் அரசுக்கரங்களின் பிடியில் நசுக்கி அழிக்கப்பட்டான் என்பது தான் நிச்சயமான உண்மை.


இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டவர்களுடன், முதல்கட்டத் தொடர்பில் இருந்த 1,258 பேரை தனிமைப்படுத்தி, அவர்களை முழுமையான சோதனைக்குள்ளாக்கினார்கள்.  1,188 பேருக்கு முழுமையாக நோய் தொற்று இல்லை என பலகட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் உறுதி செய்து, விடுவித்தனர்: அதில் தற்போது வரை 70 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்த நிலையில் 32 பேரை முழுமையாக குணமாக்கி வீட்டுக்கு ஆனுப்பி வைத்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்டத்து ஜாம்பவான்கள். இன்னும் 38 பேர் மட்டும் தான் ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் விரைவில் குணமடையச் செய்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் வெகு அருகில் இருக்கிறது.


இன்னமும் கூட நோய் பரவிவிடக்கூடாது என்று பிடியை துளிகூட தளர விடாமல் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தமிழகத்தின் ‘வூகான்’ நகரமாக மாற இருந்த ஈரோடு மாவட்டத்தை அர்ப்பணிப்புடன் பணியாற்றி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த அத்தியாவசியத்துறை அலுவலர்களையும், பணியாளர்களையும் ஈரோடு மாவட்ட மக்களுடன் இணைந்து தமிழ் அஞ்சல் நாளிதழும் பாராட்டுகிறது.

மீளட்டும் ஈரோடு மாவட்டம்!


- மாரிச்சாமி, செய்தியாளர்
சேகர், புகைப்படக்காரர்


 


------------------------------------------------------------------------------------------------


அதிரிபுதிரியாக ஆஸ்பத்திரியை காலி செய்த ஈரோடு மாவட்டம்: இன்னும் 4 பேர் தான் இருக்காங்க - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL - https://tamilanjal.page/Z8F0J9.html