கொரோனா கண்டெயின்மெண்ட் தடுப்பை பிரித்தெடுத்து விட்டு சாவகாசமாக நடமாட்டம்... எப்படி சார் கொரோனா குறையும்?

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. மாநகர காவல்துறையும், மாவட்ட காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணிகளையும் சிறப்பாகவே மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த நிலையில், கொரோனா நோய் பட்டியலில் திருப்பூர் 108 என்ற எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு 18 மாத குழந்தை, ஒரு இரண்டரை வயது குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இதன்மூலம், திருப்பூர் மாவட்டம், சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.


கொரோனாவை கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்டத்தில் 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, 30க்கும் மேற்ப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் உள்ளே செல்லவும் சாலைகளே அடைக்கப்பட்டு முழு கட்டுப்பாட்டில் கண்காணிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீசார் டிரோன் கேமரா மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாட்டம் இருக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, குமரானந்தபுரம் பகுதிகளில் கண்டெயின்மெண்ட் ஜோன் எனப்படுகின்ற கட்டுப்பாட்டு பகுதிக்கு வைக்கப்பட்ட தடுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு மக்கள் சாவகாசமாக நடமாடுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இதுகுறித்து பாபுஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் கூறியது:


இந்த பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இங்கு அமைக்கப்பட்டு உள்ள தகர தடுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 


குறிப்பாக அங்கேரிபாளையம் ரோடு பழைய எஸ்.பி., ஆபீஸ் முன்புறம் உள்ள ரோடு
பாபுஜி நகர் மெயின் ரோடு பகுதி, திருப்பூர் 60 அடி ரோட்டில் இருந்து குமரானந்தபுரம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு பல பேர் வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். இதன்மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கட்டுப்பாட்டு பகுதிகளை முழுமையாக அடைத்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி நோய்பரவலை தடுக்க வேண்டும் என்றனர்.