காய்கறி மார்க்கெட்டையும் கவனிங்க சார்.. கூட்டம் அலைமோதுது..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தற்காப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் திருப்பூர் மார்க்கெட், மீன் மார்க்கெட்டுக்கு வந்த கூட்டம், சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மக்கள் முண்டியடித்து, நெரிசலில் மீன், காய்கறிகள் வாங்கி சென்றனர். இது கொரோனா வைரசை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாக இருந்தது.


இதையடுத்து, இந்தவாரம் மீன்மார்க்கெட் முழுமையாக பூட்டப்பட்டது.  அதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள மீன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் சிடிசி கார்னரில் உள்ள மீன் கடைகள் வரிசையாக திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் மீன் வாங்கி சென்றனர்.


இங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.


காலை 7 மணியளவிலேயே முன்னெச்சரிக்கையாக வெட்டி வைத்த மீன்கள் தீர்ந்தபடியால் பொதுமக்கள் வெட்டாமல் முழு மீனை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும் குறிப்பிட்ட சிலவகை மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ரூ.200 வரை விற்கப்படும் கட்லா மீன் ரூ.250 முதல் 300 வரை விலை அதிகரித்து விற்கப்பட்டது.ஆனால் திருப்பூர் சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் கூட்டம் குறையவில்லை. முண்டியடித்து மக்கள் காய்கறி வாங்கினர். சமூக இடைவெளி இல்லாமல் கடைகள் முன் குவிந்து கூட்டம் கூட்டமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். கடைகளுக்கு முன்புறம் சமூக இடைவெளி பின்பற்ற கோடுகள் வரையப்படவில்லை.திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகிலும் கடைகள் முன்புறம் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி வாங்கினார்கள். 


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சந்தைப்பேட்டை மார்க்கெட்டை கடைகளுக்கு இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். அல்லது காய்கறி கடைகளை நகரின் பல பகுதிகளுக்கும் பிரித்து இந்த பகுதி கூட்டத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.