இந்து முன்னணி சார்பில் 20 லட்சம் மக்களுக்கு கபசுரக் குடிநீர்: காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்

மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக செய்து வருகின்றனர், எதிர்  கட்சிகள் இதை அரசியல் நோக்கோடு பார்க்காமல் மக்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போட்டியளித்தார்.திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதில் அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், குறிப்பாக தடுப்பு பணியில் ஈடுபடக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஈடுபாட்டோடு பணியை செய்து வருகிறார்கள்.


அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர், எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த கொரோனா நோயை அழிப்பதற்கும் மக்களை காப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி எண்ணுகிறது.


தமிழகத்தில் இதுவரை இந்து முன்னணி சார்பில் 20 லட்சம் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது, மேலும் உணவு, அரிசி, பருப்பு போன்றவற்றையும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி கொண்டு வருகிறது.


வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு சென்று விட்டால் நிச்சயம் திருப்பூர் தொழில் துறையினரிடம் சிறு பாதிப்பு ஏற்படும், எனவே மாவட்ட நிர்வாகம் அவர்களிடம் பேசி தங்களது ஊருக்கு செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதாக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.