சீக்கிரம் வருது டிவி சீரியல்கள்.. இனி சிங்கப்பெண்களின் கைகளில்தான் டிவி., ரிமோட்

சினிமா மற்றும் சின்னத்திரை தயாரிப்புகளின் பிந்தைய பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதன்மூலம் விரைவில் டி.வி., சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.


மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்:


1) படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)


2) குரல் பதிவு (Dubbing) (அதிகபட்சம் 5 பேர்)


3) கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) (10 முதல் 15 பேர்)


4) டி.ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் - (அதிகபட்சம் 5 பேர்)


5) பின்ன ணி இசை (Re-Recording) - (அதிகபட்சம் 5 பேர்)


6) ஒலிக்கலவை (Sound Design/Mixing) - (அதிகபட்சம் 5 பேர்)


எனவே, Post Production பணிகளை மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்த அறிவிப்பின் மூலம், தியேட்டர்களூக்கு சென்று சினிமா பார்ப்பதற்கு கொஞ்சம் தாமதமானாலும், விரைவில் டிவியில் சீரியல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதுவும் படமாக்கலுக்கு பிந்தைய பணிகளுக்காக கிடப்பில் வைக்கப்பட்டு இருந்த நிகழ்ச்சிகள் டிவியில் தடபுடலாக வரப்போகிறது.


சீரியல்கள் இல்லாமல், கொரோனா செய்திகளையே கேட்டு பிபி., ஏற்றிக்கொண்டிருந்த இல்லத்தரசிகள், இனி வீடுகளில் ரிமோட்-டை தங்கள் வசம் வைத்திருக்க சண்டை போட தயாராவார்கள் என்பது மட்டும் நடந்தே தீரும்...