பட்டுப் போன பனைமரத்தை எட்டி உதைத்து டிக் டாக்...அதே இடத்தில் மரக்கன்று நட வைத்து வனத்துறை அதிகாரிகள் நூதன தண்டனை

பட்டுப் போன பனைமரத்தை எட்டி உதைத்து டிக் டாக் - அதே இடத்தில் மரக்கன்று நட வைத்து வனத்துறை அதிகாரிகள் நூதன தண்டனை



திருச்செந்தூர்,: குதிரைமொழி தேரி  வனப்பகுதியில், பட்டுப் போன பனைமரத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி, டிக் டாக் வீடியோ வெளியிட்ட மூன்று வாலிபர்களுக்கு தலா ரூ5 ஆயிரம் அபராதமும், அதே இடத்தில் மரக்கன்று நட வைத்து வனத்துறை அதிகாரிகள் நூதன தண்டனையும் விதித்தனர்.


தற்போது தேசிய ஊரடங்கு உத்திரவு அமுலில் உள்ள நிலையில் திருச்செந்தூர் வனசரத்திற்குட்பட்ட குதிரைமொழி தேரிக்காடு மேலபுதுக்குடி சுனை வனப்பகுதியில், பறவைகள் வசிக்கும்  பட்டுப்போன பனைமரத்தை காலால் எட்டி மிதித்து கீழே தள்ளி டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் காயாமொழி பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள் வெளியிட்டனர். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் வீடியோ வெளியிட்ட அந்த வாலிபர்களை வனத்துறை சரக அலுவலர் ரவீந்திரன், வனவர் கருணாகரன், சுப்பராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் தேடிப் பிடித்து, அந்த மூன்று வாலிபர்களுக்கும் வனத்தில் அத்துமீறி நுழைந்து பனைமரத்தை மிதித்து கீழே தள்ளியதற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 


மேலும் சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்கு அழைத்த சென்று அதே பகுதியில் வேறு மரத்தை நட வைத்தனர். மேலும் வனப்பகுதி குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுரை வழங்கினர்.


Previous Post Next Post